சுமை தாங்கி.
💎💎💎💎💎
பகல் முழுவதும் பல வித பாரங்கள்.
நெஞ்சுருக்கும் சுமைகள்.
நீங்கா நினைவுப் பெருமூச்சுகள்.
கடன்கள்.
கடமைகள்.
கண்ணியம் காக்கும்
கண்பார்வைகள்.
ஆடை, அங்க மூடல்கள்.
நயன, நளின மறைப்புகள். கோபக்குறைப்புகள்.
குதூகல குறைப்புகள்.
என்னவாக இருந்திருக்கலாம் என்பதற்கும்,
என்னவாக இருக்கின்றேன்
என்பதற்கும், என்னவாகலாமோவென்பதற்குமிடயே நடக்கும் சதுரங்கவேட்டைக்கும் நடுவேயான முரண்பாடுகளைத் தாண்டியும் காலை நடுப்பகலாகி, மாலையாகி இரவாகும்.
நான் நானாயிருப்பதில் என்னையே வனைந்து கொள்கின்றேன்.
வசிய வார்த்தைகளின் திசைகளை நெற்றிப்பொட்டில் குறித்து வைத்துள்ளேன்.
அவதூறை கால்செருப்பாக்கி
உசரம் கூட்டிக்கொள்கின்றேன். கண்ணீரை உறைய வைத்து கண்மையாக்கி கர்வமாய் பார்க்கின்றேன்.
அறிவுமமதைப்பேச்சுக்களுக்கு ஞானக்காதில் நல்லசெவிடாகிக்கொள்கின்றேன்.
எனக்கென்று ஓர் பிரபஞ்சம், என் கூடு.
நானே ராணி, நானே ராசாங்கம்.
இழப்புகள் தாண்டிய புயலாறு என் பயணம்.
அடித்துச்செல்லப்படும் அத்தனை திசையிலும் நானே பயணம், பயணி.
காலையும், மாலையும் என் பயணத்தின் திசையில்தான் விடிகின்றது, அடைகின்றது!
யதார்த்தம் சுமை எனிற்
அதையும் தாண்டி தாங்கும்
ராஜராஜன் சிற்பம் என் நாட்கள்.
காலம் தாண்டியும்
காவியமாவேன் காவேரி!
A Gladys Stephen Royal Symphony!
Comments
Post a Comment